
கரிய இரவைக் கொன்று தின்று 
 உதிக்கின்றது ஒரு வெம்மைச் சூரியன் 
 
 திரள் மேகத்தைக் கிழிக்கையிலே 
 கொட்டுகின்றது ஒரு குளிர் மழை 
 
 வீரியத்துடன் விதையை அழித்து 
 துளிர்க்கின்றது ஒரு பச்சைத் தளிர் 
 
 பிரசவ வலியின் முடிவிலே 
 ஜனிக்கின்றது ஒரு சிறு ஜீவன் 
 
 நீண்டதொரு மௌனத்தை உடைக்கையிலே 
 ஊற்றெடுக்கின்றது ஒரு உன்னத காதல் 
 
 உயிர்க் காதலின் முறிவிலே 
 உணரப்படுகின்றது ஒரு உண்மை நட்பு 
 
 பாறையின் தூக்கத்தைத் தட்டி எழுப்புகையிலே 
 விழிக்கின்றது ஒரு கவின் சிற்பம் 
 
 பட்டுப் பூச்சிகளின் மரணத்திலே 
 பிறக்கின்றது ஒரு மணப் பட்டு 
 
 பருவத்தின் அறியாமையை இழக்கையிலே 
 பூக்கின்றன நற்பண்புகளும் பொறுப்புகளும் 
 
 தோல்விப் படிகளின் கடைசியிலே 
 ஆரம்பிதிடும் ஒரு வெற்றியின் ஏணிப்படி 
 
 எனவே, 
 எல்லாவற்றிலுமே..... 
 முடிவென்பதும்...... ஓர் ஆரம்பமே..........!!!!