மற்ற நிகழ்ச்சிகள்

இரத்த தான முகாம்

மனித நேயம் வாழ்ந்துகொண்டிருப்பதை பறைசாற்றும் மற்றுமோர் நிகழ்வாக சிங்கையில் அக்டோபர் 12, 2014ல் மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.பெக் கியோ சமூக மன்றம் இந்திய நற்பணிச் செயற்குழு, டெக் கீ 'சி' வட்டாரவசிப்போர் குழு, மக்கள் கவிஞர் மன்றம், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் ஆகிய அமைப்புகளின் ஆதரவில் நடைப்பெற்ற இம்முகாமில் ஏறக்குறைய 400 பேர் கலந்து கொண்டனர். இதில் பங்கெடுத்தவர்கள் பொரும்பாலும் வெளிநாட்டு ஊழியர்கள் என்றாலும் பெண்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு நாட்டினரும், இனத்தவரும் இதில் கலந்து கொண்டு பேராதரவு அளித்தனர். இரத்த தான சேவைக் குழுவைச் சேர்ந்த மருத்துவர்கள், தாதியர்கள், மற்றும் அமைப்புகளின் தொண்டூழியர்கள் என 75 பேர் தொடர்ச்சியாக 10 மணி நேரம் அயராது சேவையாற்றினர்.

பெக் கியோ சமூக மன்றத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த சிங்கப்பூர் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு லூயி டக் இயூ,  உயிர் காக்கும் சேவை புரிந்திட கூடியிருக்கும் இரத்த நன்கொடையாளர்களைப் பாராட்டினார்.  இச்சேவையைத் தொடர்ந்து நடத்திட ஏற்பாட்டுக் குழுவினருக்கு தம் ஆதரவை தெரிவித்தார்.

தொடர்ந்து 73வது தடவையாக இரத்த தானம் செய்யும் சிங்கப்பூரரான திரு ஷா இப்ராஹிம், 52, அவர்கள், 1981இல் தேசிய சேவையில் இருந்த போது முதல் முறையாக இரத்த தானம் செய்ததாகத் தெரிவித்தார். சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லீம் சங்கத்தின் ஆயுள் உறுப்பினரான இவர் பொதுவாக இரத்த வங்கிகுக்குச் சென்று தானம் செய்யும் வழக்கமுள்ளவர். இம்மாதிரியான முகாமில் நண்பர்களுடன் வந்து தானம் செய்வது மேலும் தன்னை ஊக்கப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து 13வது தடவையாக இரத்தம் கொடுக்கும் திரு நிர்மல்,  34,  இரத்த தானம் கொடுக்க த்தற்கு தயங்க வேண்டாம் என்றும் தானம் செய்வதால் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுமோ என்று அஞ்சத்தேவையில்லை என்றும் கூறினார். தொடர்ந்து 14வது தடவையாக இரத்த தானம் செய்த மஞ்சுநாதன், 33 இரத்த தானம் செய்வதை தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.  இப்படி பலமுறை இரத்தம் கொடுபவர்களுக்கு மத்தியில் முதன் முறையாக இரத்தம் கொடுக்க பலர் திரண்டு வந்திருந்தது இந்நிகழ்ச்சியின்  சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை ஒலி 96.8 ஒலிபரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் உணவளித்து ஆதரவு தந்தது ஆனந்த பவன் உணவகம்.

சிங்கையில் மாறிவரும் சுகாதார தேவைகளை ஈடுசெய்ய இம்மாதிரியான சேவைகளை அடிக்கடி ஆற்றிட வேண்டும் என்று கருத்துக் கூறிய மக்கள், தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய இம்முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்காக ஏற்பாட்டுக் குழுவினருக்கு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.