கழக அறிமுகம்

அன்றிலிருந்து இன்று வரை

சிங்கப்பூரில் "தமிழைக் கற்கவும், அன்றாட வாழ்க்கையில் அதனைப் பயன்படுத்தவும் ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதோடு, இந்தியப் பண்பாட்டுக் கூறுகளைப் பேணிக் காப்பதையும் தலையாய நோக்கமாகக் கொண்டு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது" என்ற கொள்கை பிரகடனத்தோடு 2-8-1980ல் துவங்கப்பட்டதுதான் சிங்கப்பூர் தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம்.

கொள்கை முழக்கம் செய்தவர் கழகத்தின் முதல் மேலாண்மைக் குழுத் தலைவரும் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளராகவும் பின்னாளில் சிங்கப்பூரின் அதிபராகவும் திகழ்ந்த, மறைந்த திரு. சி வி தேவன் நாயர் அவர்கள்.

தொடங்கிய நோக்கமும் வரலாறும்

இதற்கு முன், 09-4-1977ல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் சிங்கப்பூரில் தமிழ்மொழி மற்றும் கலாசாரம் குறித்த கருத்தரங்கில் உரையாற்றிய திரு தேவன் நாயர் தமிழ்மொழி இந்தியப் பண்பாடு இவற்றைக் கட்டிக்காக்க ஒரு வலுவான இயக்கம் தேவை எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

மேலும் தமிழ் பேசும் பெற்றோர்களும் கல்வியாளர்களும் ஒன்று சேர்ந்து தமிழ்மொழியின் முன்னேற்றத்துக்காக ஓர் அமைப்பை உருவாக்குவார்களாயின், அது மிகவும் பயனுடையதாக அமையும். இது குறுகிய மொழிவெறி கொண்டதாக அமையாமல், தொன்றுதொட்டு வரும் இந்தியப் பண்பாட்டுச் செல்வங்கள், சீன, மலாய் மரபுகளிலிருந்து நாம் பெறக்கூடிய சிறந்த பண்பாட்டுக் கூறுகளுடன் இணைந்து நின்று வருங்காலச் சிங்கப்பூரை உருவாக்குவதற்கு உதவும் வகையில் அமைய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

கழகம் துவங்கப்பட அடிப்படையாக அமைந்த நிகழ்ச்சி இதுதான். இதனைத் தொடர்ந்து திரு சி வி தேவன் நாயர் தலைமையில் ஒரு முன்னிலைக் குழு அமைக்கப்பட்டு சட்டதிட்டங்கள் வகுத்து அமைப்பை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை 11-09-79 ல் செய்தது.

2.8.1980ல் அன்றைய துணைப் பிரதமர் திரு கோ கெங் சுவீ தலைமையில் மாநாட்டு மண்டபத்தில் நடந்த விழாவில் கழகம் அதிகாரப்பூர்வமாக துவக்க விழா கண்டது. முதல் அறங்காவலர்குழுத் தலைவராக திரு தேவன் நாயர் பொறுப்பேற்றார். திரு எஸ் தனபாலன், திரு என் கே வன்னிய சிங்கம், திரு எம் பொன்னுதுரை, திரு.பா.கேசவன், பேராயர் திரு டி ஆர் துரைசாமி, திரு.டி.கே.ஏ.அமீனுல்லா, திரு சூர் சிங் (உயர் நீதிமன்ற நீதிபதி) ஆகியோர் மற்ற அறங்காவலர்கள். (தமிழை அனைத்து இந்தியருக்கும் பொது மொழியாக்குவது இந்தியக் கலாச்சரத்தை வளர்ப்பது என்ற கழகத்தின் நோக்கங்களை காட்டவே திரு ஆர் சிங் நியமனம் பெற்றார்)

தொடக்ககால நோக்கங்கள்

தொடக்கத்தில் கழகத்தின் முக்கிய நோக்கங்கள்

அ. இந்தியச் சிறுவர்களின் கல்வித்தர மேம்பாடு

ஆ. தமிழ்மொழி, இலக்கியம் ஆகியவற்றைப் பரப்புதல்

இ.  இந்தியப் பண்பாட்டினை வளர்த்தல்

கலாசார நடவடிக்கைகள்

இந்திய இசை, நடனம் போன்றவற்றில் தானே நேரடியாக ஈடுபடாமல் இவற்றில் ஏற்கெனவே முனைந்திருக்கும் அமைப்புகளுக்குத் தன் ஆதரவை அளிப்பது எனக் கழகம் முடிவெடுத்தது. உயர்தரமான நிகழ்ச்சி ஒன்றினை நடத்திய பின் இந்தத் துறையிலிருந்து கழகம் வெளியேறியது.

தமிழ் துணைப்பாட வகுப்புகள்

70களிலும் 80களிலும் பெரும்பாலான பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படவில்லை. தமிழை இரண்டாம் மொழியாகப் பயில மாணவர்கள் வகுப்பு நேரத்திற்குப் பின் வேறு பள்ளிகளுக்குச் செல்ல வேண்டி இருந்தது. இந்தியா ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் தமிழ் முதல் மொழியாகவே கற்பிக்கப்பட்டு வந்ததால் இரண்டாம் மொழிக்கான பாடத்திட்டம் தமிழுக்கு முன்னோடியாக எங்குமே இல்லை. கல்வியாளரும், அறங்காவலர் குழு உறுப்பினர்களுமான திரு வன்னியசிங்கம் பேராயர் துரைசாமி மற்றும் கழகத் தலைவர் திரு தேவன் நாயர் ஆகியோர் கல்வி அமைச்சிடம் இதற்கான பாடத் திட்டத்தை வகுக்க நிபுணர் குழுவின் நியமனத்திற்குப் பரிந்துரைத்தனர். இதன் அடிப்படையில் பாடத்திட்டம் பின்னர் உருவானது.

இந்திய மாணவரின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்குத் துணைப்பாட வகுப்புகளைக் கழகம் நடத்தத் தொடங்கியது. கழகத் தலைவர் திரு தேவன் நாயர் தன் செல்வாக்கினால் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆங்கில நாளிதழில் சீனமொழியைப் போலவே தமிழ், மலாய், மொழிகளில் வாரம் ஒரு முறை இரு மொழிப் பக்கம் வெளியிடச் செய்தார்.

அறங்காவலர் குழுத் தலைவர் பேராசிரியர் எஸ் ஜயக்குமார்

திரு தேவன் நாயர் நாட்டின் அதிபர் ஆவதற்கு முன்னரே, பேராசிரியர் ஜயக்குமார் இன்றைய துணைப் பிரதமர் அறங்காவலர் குழுத் தலைவரானார். திரு.ஆர் சிங் துணைத்தலைவர் ஆனார். திரு நாயர் சிறிது காலத்திற்கு மட்டுமே மேலாண்மைத் தலைவராக இருந்து விலகியபின் திரு வன்னிய சிங்கமும், பேராயர் துரைசாமியும் தலைவர் பதவியை ஒவ்வொரு முறை வகித்தனர். 1984 முதல் 1998 வரை திரு வை திருநாவுக்கரசு தலைவர் பதவி வகித்தார். அவரது தலைமையில் கழகம் பல அடிப்படையான குறிப்பிடத்தக்க நற்பணிகளை செய்து முத்திரை பதித்தது. 2-12-1998ல் தலைவர் பதவியேற்ற திரு மு ஹரிகிருஷ்ணன் தலைமையில் கழகம் பல்வேறு புதுப்புது திட்டங்களோடும், நிகழ்ச்சிகளோடும் மிடுக்கோடு பீடு நடைபோட்டு வருகிறது.

சிண்டா (சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம்) அமைவதற்கு முன்பாகவே, கழகம் முன் வந்து இந்திய மாணவர்கள் ஒவ்வொரு நிலையிலும் அனைத்து பாடங்களிலும் பெற்று வரும் கல்வித்தர தேர்ச்சி நிலையை விரிவாக ஆராய்ந்து அனைத்துப் புள்ளி விவரங்களுடன் பின்தங்குதல்களைக் களைய தனது பரிந்துரைகளை தேசியச் செயல் திட்டமாக உருவாக்கி பேராசிரியர் ஜயகுமாரிடம் சமர்பித்தது.

உங்கள் பிள்ளையால் முடியும்

அவர் பரிந்துரைகளை பரிசீலனை செய்த பின்னர் இந்தப் பணிகளை கழகத்தையே செயலாக்கச் சொன்னார். பிள்ளைகளின் படிப்பில் பெற்றோர்கள் ஆர்வமும் அக்கறையும் காட்டினால் முன்னேற்றம் எளிதாகும் என்ற அடிப்படையில் கழகம் உங்கள் பிள்ளையால் முடியும் என்ற தலைப்பில் பெற்றோரை எட்டும் திட்டம் ஒன்றை வகுத்தது. தரத்தகுதியில் மேற்படிப்பு என்னும் ஸ்ட்ரீமிங் முறை கண்டிப்பாக இருந்த அந்தக் காலக் கட்டத்தில் இந்திய மாணவர் பலர் பின்தங்கி, பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தியப் பெற்றோர் பலர், இக்கல்விமுறையைப் பற்றி சரிவர விளங்கிக் கொள்ளாமல் பிள்ளைகளைப் படிப்பில் ஊக்குவிக்கும் திறனிற்றி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடத்திட்ட விளக்கக் கூட்டம்

கழகம் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் சிங்கையில் அமுலில் இருக்கும் பாடத்திட்டத்தை விளக்கி துணைக்கல்வி வசதிகள், தரம் பிரித்தல் எனும் ஸ்ட்ரீமிங் முறையினால் பிள்ளைகள் எதிர் நோக்கும் சவால்கள், அவர்களை ஊக்குவிக்கும் வழிகள், இவற்றை விவரமாகத் தெரியப்படுகிறது. இது குறித்து கழகம் நடத்திய நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களும் பெற்றோர்களும் திரளாக வருகை தந்தது பள்ளி முதல்வர்களை வியப்பில் ஆழ்த்தியது. பரவலாக நாட்டின் பல பகுதிகளிலும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சிண்டா உருவாதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை ஒட்டி கழகத்துடன் நடத்திய திட்டத்தை வெகுவாகப் பாராட்டினார். சிண்டா உருவானதும், இந்தத் திட்டத்தை தானே ஏற்க முன்வந்தது. கழகம் சேர்ந்து நடத்தவும், தன்னால் இயன்ற அளவில் நிதி உதவி செய்யவும் இணங்கியது.

நிதியுதவி

சிண்டாவிற்கு நிதியுதவி முதலில் செய்த இந்திய அமைப்புகளில் கழகமும் ஒன்று. திருக்குறள் விழா மேடையில் 11.07.1992 நன்கொடையாகத் திரட்டி ரூ.32,001/- நிதியை கழகம் வழங்கியது. திருக்குறள் விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அன்றைய சட்ட, உள்துறை அமைச்சரும் சிண்டா பொறுப்பாட்சியாளர்கள் கழகத்தின் தலைவருமான பேராசிரியர் ஜயக்குமாரிடம் அத்தொகையை கழகத்தின் தலைவர் திரு வை திருநாவுக்கரசு வழங்கினார். இதில் கழகத்தின் ரூ.10,000/-மும் அடங்கும். தொடர்ந்து கழகம் ஒவ்வோராண்டும் குறள் விழாவின் போது சிண்டாவிற்கு நன்கொடை அளித்து வந்திருக்கிறது.

சொல்லாக்கக் குழு

இன்றைய அறிவியல் தொழில்நுட்ப உலகில் புதுப்புது வரவுகளுக்கு ஏற்ப புதுபுதுச் சொற்களும் உருவாக்கம் பெற்று வருகின்றன. தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் நடைபெற்று வரும் கலைச்சொல்லாக்கப் பணிகளை சிங்கப்பூரில் தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம் செய்ய முற்பட்டது. 15.3.1986ல் கழகத்தாரும் மொழிபெயர்ப்புத் துறையில் பல்லாண்டுக் கால அனுபவமும் முதிர்ச்சியும் பெற்ற தமிழறிஞருமான திரு வை திருநாவுக்கரசு அவர்களின் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

குடும்ப தினம்

ஆரம்ப காலங்களில் திருக்குறள் போட்டிகளை, குடும்ப தினத்தை மையமாக வைத்து கழகம் நடத்தியது. சிறுவர்களுக்கான திருக்குறள் போட்டிகள், ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், மற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்கு குடும்ப தினத்தன்று ஏற்பாடு செய்யப்பட்டது. கேளிக்கைக்காக பண்டைய தமிழரின் தற்காப்புக் கலையான சிலம்பாட்டம் போன்றவைகள் அங்கு நிகழ்த்திக் காட்டப்பட்டன. கயிறிழுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன.

1987ஆம் ஆண்டிலிருந்து குடும்பதின விழாவை கழகம் ஏற்பாடு செய்து நடத்தியுள்ளது. பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட குடும்பதின விழாவில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். பின்னர், இதே போன்ற நிகழ்ச்சிகளை மற்ற அமைப்புகள் நடத்த முற்பட்டதும் கழகம் இதைத் தொடராமல் புது நிகழ்ச்சிகளை நடத்த முனைந்தது.

திருக்குறள் விழா

சிங்கப்பூர் தமிழர்களின் தேசிய விழாவாகக் கருதப்படும் திருக்குறள் விழாவை கடந்த 21 ஆண்டுகாலமாக கழகம் மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது. குறள் விழாவைத் தொய்வின்றி தொடர்ந்து சிறப்பாக நடத்தும் கழகத்தின் விடாமுயற்சியைப் பாராட்டாதோர் இலர் என்றே கூறலாம். குறள் விழாவையொட்டி மாணவர்களுக்கு குறள் மனனப்போட்டி, ஒப்பித்தல் போட்டி, இருவர் உரையாடல் போட்டி என தொடக்கநிலை, உயர்நிலை தொடக்கக்கல்லூரி பலதுறைக்கல்லூரி மற்றும் பொதுப்பிரிவுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு திருக்குறள் விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன. பாலர் பள்ளி மணவர்களுக்காக வள்ளுவர் படத்துக்கு வண்ணம் தீட்டும் போட்டி நடத்தப்படுகிறது. 2008ஆம் ஆண்டு பொதுப்பிரிவில் புதுமையாக. குறும்படம் தயாரிக்கும் போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறள் விழாவின் மூலம் இந்திய மக்கள், குறிப்பாக இளையர்கள் மாணவர்கள் ஆகியோருக்கு வாழ்க்கைக்குத் தேவையான குறளின் சீரிய கருத்துக்கள் விழாவை மையமாக வைத்து சிறப்புரைகள் மூலம் எடுத்துச் சொல்லடுகின்றன.

இந்திய சமூகத்திற்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பது விழாவில் வலியுறுத்தப்படுகிறது.

சமூகத்துக்குப் பெருமை சேர்ப்போருக்கு திருவள்ளுவர் விருது

பல்வேறு துறைகளில் சாதனை படைத்து நம் சமூகத்திற்குப் பெருமை சேர்ப்போரைக் குறள் விழாவில் பாராட்டிச் சிறப்பிப்பதை 1999 முதல் கழகம் தொடங்கியிருக்கிறது. இந்த விருது 2007ம் ஆண்டு முதல், திருக்குறள் விழாவின் தலைவர் பொறுப்பேற்ற திரு எம் இலியாஸ் அவர்களின் பரிந்துரையின்படி திருவள்ளுவர் விருது என அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொள்ளும் குறள் விழாவில் சிங்கப்பூரின் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் போன்றோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவர். தலைசிறந்த வெளிநாட்டுப் பேச்சாளர் ஒருவரின் சிறப்புரையும் இடம்பெறும்

கடந்த காலங்களில் திருக்குறள் விழாக்களில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள், சிறப்புப் பேச்சாளர்கள் விழாவில் சிறப்பிக்கப்பட்டு விருதுபெற்றோர் ஆகியோரின் பெயர்களை பட்டியலிட்டால் கட்டுரை மிக நீளமாகும்.

தமிழ்மணி

கழகத்தின் அதிகாரப்பூர்வ ஏடான தமிழ் மணி குறள் விழாவின் போது வெளியிடப்படுவது வாடிக்கை. குறள் விழா தொடங்கப்பட்ட காலத்தில் சுமார் ஆறேழு ஆண்டுகள் தொடர்ந்து விழாவின் போது வெளிவந்தது. அதன்பின் பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த 2007 மற்றும் 2008 ஆகிய இரு ஆண்டும் மிகச் சிறப்பாக திரு இலியாஸ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தமிழ் மணி மலர் குறள் விழாவில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்விரு ஆண்டு சிறப்பு மலரிலும் தலைவர்கள் பலரின் வாழ்த்துச் செய்திகள் இடம்பெற்றிருந்தன. சிங்கப்பூர் அதிபர் எஸ் ஆர் நாதன், முன்னாள் இந்திய அதிபர் டாக்டர் அப்துல் கலாம், தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் ஆகியோர் வாழ்த்துச் செய்தி வழங்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

திருவள்ளுவர் சிலை

2007ம் ஆண்டு திருக்குறள் விழாவில் கழக அலுவலகத்தில் வைப்பதற்காகத் திருவள்ளுவர் சிலை நாடாளுமன்ற துணைச் சபாநாயகரும் தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான குமாரி இந்திராணி ராஜா அவர்களால் விழா மேடையில் திறந்து வைக்கப்பட்டது.

சிங்கப்பூரில் திருவள்ளுவர் சிலை நிறுவ வேண்டும் என்கிற தமிழர்களின் நீண்டநாள் கனவை உசுப்பிவிடுவதாக இந்நிகழ்வு அமைந்ததாக தமிழ் ஆர்வலர்கள் பரவலாக கருத்துத் தெரிவித்தனர்.

நாளும் ஒரு குறள்

கழக உறுப்பினர்களுக்கும் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கும் ஆங்கிலம் மற்றும் தமிழில் நாளும் ஒரு குறள் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது

பாரதியார் விழா

கழகம் வளர்தமிழ் இயக்கத்துடன் இணைந்து முதன் முறையாக 2.9.2001ல் பாரதியார் விழாவைக் கொண்டாடியது. விழா தொடர்பில் இரு பிரிவுகளுக்குப் பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவச் சிறுவன் பாரதியார் வேடமேற்று பார்வையாளர்களை வரவேற்றதும் இன்னொரு மாணவர் பாரதியார் வேடமிட்டு மேடையேறி உரையாற்றியதும் பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றன.

2002ம் ஆண்டு முதல் மகாகவி பாரதியார் விழாவோடு பாவேந்தர் பாரதிதாசனையும் இணைத்து பாரதியார் – பாரதிதாசன் விழா என்ற பெயரில் மிகச் சிறப்பாக தொடர்ந்து ஆண்டுதோறும் விழா நடத்தப்படுகின்றன. விழா மேடையில் வெற்றி பெற்றோர்க்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

பாரதியார் பாரதிதாசன் விருது

சமீப காலமாக விழாவில் உள்ளூர் எழுத்தாளர்கள், கவிஞர்கள் சிறப்பிக்கப்படும் அங்கமும் இணைக்கப்பட்டு மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இலக்கியவாதிகளுக்கு பாரதியார் பாரதிதாசன் விருது வழங்கப்படுகிறது.

மகளிர் அணி

தமிழ்மொழி மற்றும் பண்பாடு கலை ஆகிய அம்சங்களில் மகளிர்க்கான அவர்களது பங்களிப்பை உறுதி செய்யக் கழகம் புதிய முயற்சியாக மகளிர் அணியை உருவாக்கியது. திருமதி பானுமதி ராமச்சந்திராவின் தலைமையில் 2002ம் ஆண்டு அது தொடங்கப்பட்டது. 2003ம் ஆண்டு முதல் பாரதி – பாரதிதாசன் விழாவை மகளிர் அணியினரே தலைமையேற்று நடத்தி வருவது பெருமையோடு குறிப்பிடத்தக்கது.

இளைஞர் அணி

மொழிசார்ந்த அமைப்பான கழகத்தில்  இளையர்கள் இப்போதே இணைந்து பணியாற்றினால்தான் எதிர்காலச் சமுதாயத்திற்கு நல்ல தலைமையைத் தரமுடியும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தி.வி.எம்.நௌஃபல் தலைமையில் இளையர் அணி 2002ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது திரு.கோவிந்தராஜன் தலைமையில் இளையர் அணி செயல்படுகிறது. 23.8.2003ல் இணையத்தள வடிவமைப்புப் பயிற்சி பட்டறையை இளையர் அணி சிறப்பாக நடத்தியது. பொதுமக்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைத்தது. சுமார் 40 பேர் கலந்து கொண்டனர். உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் இப்பற்றாக்குறையின் காரணமாக பெயர் பதித்துக் கொண்ட அனைவருக்கும் வாய்ப்பளிக்க இயலவில்லை. பட்டறை பயனுள்ளதாக அமைந்ததாகக் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர். பணினிப் பயனுள்ளதாக அமந்ததாகக் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர். கணினிப் பட்டறை மற்றும் கருத்தரங்குகள் நடத்த இளையர் அணியின் முயற்சிகள் தொடர்கின்றன.

தொண்டூழியர் அணி

கழகம் நடத்தும் விழாக்கள் மற்றும் விழாத்தொடர்பில் நடத்தப்படும் போட்டிகளின்போது பெருமளவில் ஆள்பலம் தேவைப்படுவதால் அதற்குத் தேவையான தொண்டூழியர்களைத் திரட்டும் முயற்சியில் கழகம் தொடர்ந்து ஈடுபட்டு வெற்றி கண்டு வருகிறது.

கழகம் நடத்தும் போட்டிகளுக்கு நீதிபதிகளாக இருந்து அருந்தொண்டாற்றிய ஆசிரியர் பெருமக்களுக்கும் தொண்டூழியர்களுக்கும் விருந்தளித்து பாராட்டுப்பரிசுகளைக் கழகம் வழங்கிச் சிறப்பித்து வருகிறது.

பேச்சாளர் மன்றம்

தமிழ் மக்களிடையே குறிப்பாக தமிழ் இளைஞர்களிடையே தமிழ் மொழியைச் சரளமாக பேசுவதற்கு ஊக்குவிக்கவும் அவர்களது தைரியதையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கவும் கழகம் பேச்சாளர் மன்றத்தை உருவாக்கியுள்ளது.

1924ல் தொடங்கப்பட்ட, அமெரிக்காவை தலைமையாககக் கொண்ட டோஸ்ட்மாஸ்டர்ஸ் இண்டர்நேஷனலுடன் இணைந்து 2002 ஜுன் முதல் கழகத்தின் பேச்சாளர் மன்றம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இம்மன்றத்தின் அதிகாரப்பூர்வத் தொடக்கவிழா 8.2.2003ல் உமறுப்புலவர் தமிழ் மொழி நிலயத்தில் நடைபெற்றது. தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் குமார் இந்திராணி ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு சிறப்பித்தார். மாதந்தோறும் கடைசி வியாழக்கிழமை கழகத்தின் பேச்சாளர் மன்றக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

கழகத்தின் மற்ற ஆக்கரமான பணிகள்

தேசியப் பல்கலைக்கழகத்திலும் நன்நாய் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலும் தமிழ்த்துறை உருவாவதற்கு 1991-ம் ஆண்டிலேயே கழகம் கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது.

தொழிலாளர்கள் சட்ட விதிமுறைகளை கழகம் மொழிபெயர்ப்புச் செய்து கொடுத்திருக்கிறது.

மருந்து பாட்டில்களில் இடம்பெற்றிருக்கும் எச்சரிக்கை குறிப்புகளை (PSB-LABEL) கழகம் உற்பத்தித்திறன் மற்றும் தர நிர்ணயக் கழகத்திற்குப் பொதுவாக எச்சரிக்கை குறிப்புகளுடன் மொழிபெயர்த்துத் தந்துள்ளது.

லிட்டில் இந்தியாவில் குப்பை போடாதீர்கள் அறிவிப்புகளும் தேசி தொழிற் சங்க காங்கிரசின் பல மொழி பெயர்புகளும் கழகம் செய்து கொடுத்தவையே.

மேலும் எங்கெல்லாம் தமிழ் இல்லையோ அல்லது எழுதப்படாமல் விடுபட்டிருக்கிறதோ அங்கெல்லாம் தமிழ் இடம்பெற கழகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

சமய நல்லிணக்கம் தொடர்பான கோட்பாடு ஒன்றை உருவாக்குவது குறித்த யோசனை முதன் முதலில் 2002ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தெரிவிக்கப்பட்டது. அன்றைய துணை அமைச்சர்களில் ஒருவராக திரு சான் சூ சென் தலைமையில் ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டு

பின்னர் பல சமய அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றியது. இக்குழுவில் கழகம் முக்கிய அங்கம் வகித்தது. அதோடு இந்தக் கோட்பாடு தமிழில் மொழி பெயாக்கப்படுவதில் கழகம் முக்கிய பங்காற்றியது. கோட்பாட்டு உறுதி மொழியின் தமிழாக்கத்தை இன்றும் இணையதளத்தில் காணலாம்.

சமூக நற்பணிகளுக்குக் கழகத்தின் ஆதரவு

கழகம் நடத்தும் முக்கிய விழாக்கள் மற்றும போட்டிகள் செயல்பாடுகளோடு மட்டும் தனது வட்டத்தை சுருக்கிக் கொள்ளாமல் உதவி நாடும் மற்ற அமைப்புகளுக்கும் ஆதரவளித்து வருகிறது. அந்த வகையில் 5.1.2002 தொடங்கி இரு நாட்கள் நடைபெற்ற அனைத்துலக அரங்கில் தமிழ் என்ற மாநாட்டை சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மன்றத்துடன் இணைந்து பணியாற்றியது.

மொழி பண்பாடு போன்றவற்றை முன்னிறுத்தி நடத்தப்பட்ட பிற அமைப்புகளின் நிகழ்ச்சிகளுக்குக் கழகம் நிதியுதவி அளித்து ஆதரவு வழங்கி வருகிறது.

தமிழவேள் கோ சாரங்பாணி கல்வி அறநிதிக்கும் கழகம் கணிசமாக ஆதரவளித்திருக்கிறது. தலைவர் மற்றும் பொருளாளர் இந்த நிதி திரட்டில் முக்கிய அங்கம் வகித்தனர்.

குறிப்பிடத்தக்க மற்ற அமைப்புகள் நடத்தும் அழைக்கும் நிகழ்ச்சிகளுக்கு கழகத்தின் சார்பில் தலைவர் துணைத்தலைவர் அல்லது செயலாளர் கழகத்தைப் பிரநிநிதித்து தவறாது கலந்து கொள்வது வழக்கம்.

கழகத்திற்குப் பெருமை சேர்த்த முப்பெரும் விழாக்கள்

சிங்கப்பூரிலுள்ள அனைத்து இந்திய அமைப்புகளும் ஒருங்கிணைந்து கொண்டாடிய தேசிய தின விருந்து நிகழ்ச்சியை 1998-ம் ஆண்டு கழகம் தலைமையேற்று நடத்தியது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அன்றைய சட்டம் மற்றும் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் எஸ் ஜெயக்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் வந்தபோது 6.1.1999ல் சிங்கப்பூர் உள்ளரங்கில் நடைபெற்ற இலக்கியப் பேருரை நிகழ்ச்சியை சிறப்பாக முன்னின்று நடத்தியது. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வெகுவாகப் பாராட்டி நன்றி தெரிவித்தார்.

கழகம் தொடங்கி 25 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடி மகிழவும் கழகத்தின் நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டும் வகையிலும் 23.4.2005ல் வெள்ளி விழா விருந்து நிகழ்ச்சியை கழகம் நடத்தியது. ராபிள்ஸ் டவுன் கிளப்பில் நடைபெற்ற வெள்ளி விழா விருந்தில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் திரு.தர்மன் சண்முகரத்தினம் கலந்துகொண்டார்.

கலந்துரையாடல்

ஊடகங்கள், நாளிதழ்கள் அவ்வப்போது கழகத்தின் கருத்துகளைக் கோருகின்றன. அரசாங்கம் நடத்தும் பல்வேறு கலந்துரையாடல் நிகழ்வுகளிலும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் தொடர்பான பல்வேறு கலந்துரையாடல்களிலும் கழகம் பங்கேற்று பல ஆக்கரமான கருத்துக்களை முன்வைத்து வருகிறது. அமைச்சர் நிலையில் பல கலந்துரையாடல்களை முன்னின்றும் நடத்தியுள்ளது.

தேசிய நூலக வாரியமும் ஒலி 96.8ம் இணைந்து ஏற்பாடு செய்த வாசிப்பை நேசிப்போம் நிகழ்ச்சியில் கழகம் பங்கெடுத்தது. சிண்டாமல் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் கழகம் பங்கெடுத்தது. சிண்டாமல் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் தலைவர் திரு.ஹரிகிருஷ்ணன் வெற்றி நிச்சயம் என்ற புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வாசித்து விழாவைத் தொடங்கி வைத்தார்.

தரமான நூல்களை எழுதி வெளியிடும் எழுத்தாளர்களின் நல்ல நூல்களை வாங்கி ஆதரவு வழங்குவதை கழகம் வழக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழ் முரசுடன் இணைந்து புதிர்போட்டிகள் பல நடத்தியுள்ளது. தற்போது தமிழ் முரசு வழங்கும் நல்லாசியர் விருதுக்கு ஆண்டுதோறும் ஆதரவு வழங்கி வருகிறது.

மக்கள் கழக நற்பணிப் பேரவை நடத்தும் சொற்களம், சொற்சிலம்பம், குடும்ப தினம் ஆகியவற்றிற்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் அமைப்பாகக் கழகம் திகழ்ந்து வருகிறது.

ஒலி 96.8 டன் இணைத்து தமிழ் நாடகம், வசனம் எழுதும் போட்டிகளை கழகம் நடத்தியுள்ளது. திரு சுகி சிவம் போன்ற தமிழறிஞர்களின் வெற்றி நிச்சயம் தன்முணைப்பு உரையை வானொலியில் கழகம் படைத்தது. வானொலியின் சமூக நேரம் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இந்நிகழ்ச்சியை கழகம் நடத்தியது.

2004ம் ஆண்டு திருக்குறள் விழா தொடர்பில் பொது மக்களுக்குகாக எழுத்தாற்றால் போட்டியை கழகம் நடத்தியது.

கழகம் அதன் செயல்பாடுகளை குறிப்பாக மாணவர்களிடம் கொண்டு செல்லும் வகையில் பல பட்டறைகளையும் கண்காட்சியையும் நடத்தியுள்ளது. 5.6.2003ல் ஆங்கிலோ-சீன தொடக்கப்பள்ளியில் தமிழில் மேடைப்பேச்சு என்ற மாதிரிக் கூட்டத்தையும் 29.06.2003ல் ஸ்ரீ தண்டாயுதபாணி கோவிலில் தொடர்புத் திறன்கள் என்ற மாதிரிக் கூட்டத்தையும் மற்றும் தமிழில் விவாதத்திறன் விவாதமன்றம், சொல்வேந்தர் 2003 ஆகிய நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளது.

மோல்மின் சமூக மன்றத்துடன் இணைத்து தொழில்முனைப்பு கருத்தரங்கம் நடத்தியுள்ளது. இதற்குமுன் பல இலக்கிய உரைகள், கலந்துரையாடல்கள், தமிகத்தின் திரு.சுகிசிவம், திரு.சாலமன் பாப்பைய்யா இருவரும் கலந்து கொண்ட அமுதும் தேனும் நிகழ்ச்சி, இணையத்தந்தை அமரர் சிங்கப்பூர் நா கோவிந்தசாமி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாகோ  அரங்கு நிகழ்ச்சியையும் சிங்கப்பூரின் முன்னாள் அதிபரும் கழகத்தின் முதலாம் தலைவருமான திரு சி வி தேவன் நாயர், தமிழ் மொழி பாண்பாட்டுக் கழகம் மற்றும் வளர்தமிழ் இயக்கத்தின் அஞ்சலிக் கூட்டங்களையும் கழகம் நடத்தியது.

பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் இணையதளம் வடிவமைக்கும் போட்டியை வளர்தமிழ் இயக்கம் மற்றும் சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்துடன் இணைத்து கழகம் நடத்தியது. இப்போட்டி சிங்கப்பூரிலேயே முதல் முறையாக நடத்தப்பட்டது.

இந்து அறக்கட்டளை வாரியம் மற்றும் மோல்மின் சமூக மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து சிராங்கூன் ரோடு சிராங்கூன் பினாசா எதிரேயுள்ள திடலில் தீபாவளிச் சந்தையை ஆண்டுதோறும கழகம் நடத்தி வருகிறது.

கழகத்தின் குறிப்பிடத்தக்க ஏனைய நிகழ்ச்சிகள்

  1. உறுப்பினர் முக்கிய தமிழினத்தவர் மறைந்தால், இரங்கல் செய்திகள் வெளியிடுவது.
  2. முதன் முதலில் பட்டிமன்ற நிகழ்ச்சிகளைப் பல சமூக மன்றங்களில் நடத்தியது.
  3. சிங்கப்பூரில் முதன் முதலாக 2001ல் மதுரைப் பேராசிரியர் முனைவர் ஞானசம்பந்தன் தலைமையில் வழக்காடு மன்ற நிகழ்ச்சியை அரங்கேற்றியது.
  4. அரசாங்க நிதி அறிக்கை மற்றும் பல்வேறு வானொலி , தொலைக்காட்சி, கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றது.
  5. சிங்கப்பூர் வரும் தமிழ் நாட்டுப் பேச்சாளர்களின் சொற்பொழிவுகளை அரங்கேற்றுவது.
  6. தமிழ் பேசாதவருக்கு பேச்சுத்தமிழ் வகுப்புகளை நடத்தியது.
  7. கடந்த மூன்றாண்டுகளாக வளர்தமிழ் இயக்கம் நடத்தும் தமிழ்மொழி விழாவில் இணைந்து பணியாற்றுவது.
  8. குமாரி பாமிதா பர்வின் திரு உ உதுமான் கனி, திரு பொன் சுந்தரராசு திரு.அழகிய பாண்டியன் திரு ஸ்ரீதர் போன்ற சிங்கப்பூர் பேச்சாளர்களை மேடையேற்றி விழாவில் பேசவைத்துள்ளது.

இறுதியாக

தொலைநோக்கு மற்றும் பரந்த மனப்பான்மையுடன் தமிழ் மொழி, பண்பாடு மற்றும் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தின் நன்மைக்காகப் பாடுபடும் அமைப்பு தமிழ்மொழிபண்பாட்டுக் கழகம்.

29 ஆண்டுகால வரலாற்றில் கழகம் தடம் பதித்த ஆகப்பணிகள் கலாசார தமிழ்ப் பணிகள் பலப்பல. குடியரசில் சாதனை சரித்திரம் படைத்துவரும் முன்னணி தமிழ் அமைப்பு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் என்று கூறினால் அது மிகையல்ல.

slot deposit pulsa slot Thailand slot dana slot deposit pulsa slot thailand slot pulsa slot dana slot dana slot dana slot777 slot deposit pulsa slot dana slot gacor